Monday, February 15, 2010

தலையங்கம்: தேவகாந்தன்

தலையங்கம்: தேவகாந்தன்

‘அழிவின் கதறலையும்
நெஞ்சில்
நம்பிக்கையையும் சுமந்துகொண்டு
நான் உங்களிடம் வருகிறேன்…’
 ஏர்னஸ்ரோ சே குவேரா


1
புகுந்த ஒரு நாட்டின் மொழியினுள்ளும், பண்பாட்டினுள்ளும் ஓரினம் தன்னை விரும்பியே ஒப்புக்கொடுப்பதில்லை. காலவோட்டத்தில் மெல்ல மெல்லவாய் அது தானே நிகழ்கிறது. எனினும் அதன் வேரடியாக அதன் அசலான இனத்துவசு; கூறுகள் மெதுவான மாற்றங்களோடும் தம்மைத் தக்கவைத்துக்கொண்டு புதிய பரிமாணத்துக்காகக் காத்துநிற்கவே செய்யும்.

நாளைய புலம்பெயர் இலக்கியத்தின் வெளிப்பாடு கனடாவை, இங்கிலாந்தை, அவுஸ்திரேலியாவை, அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த மொழியினூடாக நிகழப்போகிறது என்பதில் ஐயப்பாடுகளுக்கு இடமில்லை. அது ஆங்கிலத்தின் வழியாகவேதான் இருக்கப்போகிறது. ஆனாலும் நாளைய தலைமுறையின் படைப்பு மொழியில் இந்த இனம்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு நிச்சயமாக இருக்கவே செய்யும். அவர் தம் சிந்தனையின் அசலான திசை அதனடியாகவேதான் அமையும். அதன் காரணமாய், அப் படைப்பு கனடா ஆங்கில இலக்கியமாக அடையாளப்படும் நேரத்திலும், அவர் தம் வேரடி சார்ந்த வெளிப்பாடுகளின் அம்சங்களைக் குறிக்கும் வண்ணம் கீழ்த்திசைக் கலாச்சாரமான, ஆசியக் கலாச்சாரமான, ஈழத் தமிழ்க் கலாச்சாரமான படைப்பாகவே நின்று நிலைக்கும்.

ஆனாலும் இந்த நிலைமாற்றத்துக்கான காலக் கணக்கை நூற்றாண்டுக் அளவில்தான் போடவேண்டியிருக்கிறது.

அதுவரையான இலக்கிய, கலை முயற்சிகள் கனடாத் தமிழ்ப் பரப்பில் எப்படி இருக்கப்போகின்றன? தன் புலத்தில் மானசீகமாகப் போராடிக்கொண்டும், புகுந்த நிலத்தில் தம் வாழ்வின் கரிசனங்கள் மீதூரப்பெற்றும் ஓர் இரட்டுற வாழ்க்கையை வாழுமினத்தின் இலக்கிய, மொழி, கலை அக்கறைகளை நாம் எப்படி வளப்படுத்தி வளர்த்தெடுப்பது? இது குறித்து பல்வேறு சமூக, அரசியல் நிலைமாற்றுக் காலங்களிலும் தம் அக்கறைகளின் காரணமாய் தொடர்ந்த ஓர் உரையாடலில் ஈடுபட்டவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘கூர் கலை, இலக்கிய வாசகர் வட்டம்’.

2006இன் இலையுதிர் காலத்தில் தன் முதலாவது சந்திப்பை அது ஒரு கவிதை அமர்வுடன் தொடக்கியது.

திட்டமிட்டுமோ, திட்டமிடாமலுமோ இங்கு வந்து சேர்ந்தவர்கள் தாம் வந்துசேர்ந்த பனிப்புலத்தின் தன்மையை உணராமல்தான் இந்தக் கலை இலக்கிய முயற்சியைத் தொடங்கியிருந்தார்கள் என்பது விரைவிலேயே தெரிந்தது. வாழ்க்கையை இயல்பில் வாழ்வதற்கான தளமாக இந்த நாடு இருக்கவே இல்லை. தன் இரைக்கான வலைப்பின்னலை இயற்றி விரித்துவிட்டுக் காத்திருக்கும் சிலந்திபோல் இந்நாடு, தன் கனிம வளங்களை வெளிக்கொணரவும், வேறுருவாக்கம் செய்யவும் தன் வசிய கரங்களுடன் காத்திருக்கிறது. அமெரிக்காவை வளப்படுத்திய கறுப்புக் கரங்கள்போல், கனடாவை வளப்படுத்த அதன் விரிபரப்பில் மக்கள் தொகையை ஏற்படுத்த லத்தீன் அமெரிக்க, இஸ்பானிய , கிழக்கு அய்ரோப்பிய வெள்ளைத் தோல், ஆசிய மஞ்சள் தவிட்டுநிறத் தோல், ஆபிரிக்க கறுப்புத் தோல் நவீன அடிமைகளை அது ஆண்டுதோறும் குவித்துக்கொண்டிருக்கிறது.

அரசியல் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக இங்கு ஓடிவந்தவர்கள், அதன் பொருளாதார சுதந்திரத்தின் வெளிகண்டு மயங்கிய வேளையில், அவர் தம் வாழ்வின் முதல் சுழல் எதிர்வந்ததாய்க் கொள்ளமுடியும். அதில் அகப்பட்டவர்கள் இன்றுவரை விடுபடவேயில்லை. அந்த விடுபடுதல் நடக்குமென்ற நம்பிக்கையும் இல்லை. இந்தத் தளமும், இந்தப் புலமும் அப்படி. இங்கு எதிலேனும் அகப்பட்டு வீழ்ந்துபோபவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை.

ஆனால் இந்த நிலைமை இந்தவினத்துக்கு மட்டும்தானா என்றால் இல்லையென்றே சொல்லக்கிடக்கிறது. இதன் மீது கழிவிரக்கம் பட்டுக்கொள்ள முடியும். வாழ்தலென்பது விரும்பி வீழும் சிறைகளானாலும்கூட அத்தோடு முடிந்துவிடாது என்பதை உணர முடிகிறவகையில், அந்த நிலைமையில் இருந்துகொண்டுதானும், வேறேதேனும்; வகையிலும் விகிதத்திலும், வாழ்தலை முடிந்தளவு அர்த்தப்படுத்திவிட கலை இலக்கியத்தின் மூலம் முடியுமென இக் குழு முற்றுமாக நம்புகிறது. தானே ஒரு வசதியீனச் சுழலில் விழுந்திருந்ததால் தன் முழு ஆதங்கங்களின் செயல்படுத்துகையில் ஒரு தேக்கத்தைச் சந்தித்த இக் குழு, இறுதியாக வேறொரு தளத்தில் இயங்கத் தீர்மானித்தது. இதன் உடனடி விளைவுதான் ‘கூர் கலை இலக்கியத் தொகுப்பு’ ஒன்றின் வெளியிடுதலுக்கான முடிவு. 2008 பனி காலத் தொடக்கத்தில் தொகுப்பு வெளிவருமென அது பத்திரிகைகளின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

சிற்றிதழ் தளத்தில் தீவிரமாக இயங்கியவர்களின் இந்த முயற்சிகூட ஒருங்கிணைக்கப்பட முடியாதபடி சிதறியிருந்தது என்பதுதான் இங்கே எழுந்த சோகம்.

ஆயினும் ஒரு தொகுப்பு கனடாத் தமிழிலக்கிய, கலைகளின் சமகால நிலைமையை அறிய மிகவும் முக்கியமானது என்பதை இக் குழுவில் சிலரேனும் உணர்ந்து பல்வேறு முயற்சிகளில் தொகுப்பைக் கொண்டுவர முனைந்தனர். எனது இந்த முயற்சிக்கு கௌசலா, டானியல் ஜீவா இருவரும் துணைநின்றனர். தொகுப்பு அவர்களின் எதிர்பார்ப்புக்கு பாதியளவுகூட நின்றுபிடிக்கவில்லையென்பதை எந்த தயக்கமுமின்றி இங்கே வெளிப்படுத்துவது அவசியம். ஆயினும், இங்கிருந்துதான் எந்தச் செயற்பாடும் தொடங்கப்படுவது சாத்தியமென்ற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது. அதனால் புரிந்துணர்வுள்ள அச் சிலரின் செயல்பாட்டினது வடிவம்தான் இன்றைக்கு உங்கள் கரங்களில் இருக்கும் ‘கூர் 2008: நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்’.

தமிழ்நதியின் ஒரு கவிதையிலிருந்து ‘நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்’ என்ற இத் தொகுப்பின் உள்ளுயிரை வெளிப்படுத்தும் தலைப்பு அவர்களால் வகிர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.





2
முழு மலரான இதுபோன்ற முயற்சிகள் இல்லாவிடினும் முயற்சிகளே இல்லாமல் இருக்கவில்லை இக் கனடாத் தமிழ்ப் பரப்பிலே என்ற வி~யத்தை நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ‘அரும்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பினை முக்கியமானதாகக் கொள்ளலாம். பன்னிருவரின் பன்னிரு சிறுகதைகள் அடங்கிய அத் தொகுப்பில் எழுதியவர்களில் இருவர் மட்டுமே இத் தொகுப்பில் இணைந்திருக்கிறார்கள். மற்றவர்களின் பங்களிப்பின்மையை எப்படிப் புரிவதென்று தெரியவில்லை. பங்களிப்புக்களின் தரமும் இந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னான பார்வை, எழுத்து, இலக்கியப் பரிணாமம் என்று எந்த அளவையிலும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையும் சுட்டவே வேண்டியுள்ளது.

சி.எம்.ஆர். வானொலி நடாத்திய 2007 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டிக்கு வந்து தேர்வாகிய கதைகளின் தரத்துக்குக்கூட அவை நிற்கவில்லையென்பது வருத்தத்துக்குரியது. ஏன் கனடாத் தமிழ்ப் பரப்பில் சிறுகதையின் வீறார்ந்த படைப்புக்கள் மேலெழவில்லையென்பது நிதானமான யோசிப்புக்களில் நமக்குப் புரிதலானதுதான். ஆனாலும் அதையெல்லாம் இங்கே எடுத்துரைக்கும் முயற்சியை நாம் செய்யப்போவதில்லை. ஒன்றை மட்டும் சொல்லி மேலே செல்கிறோம். படைப்பின் அதிமுக்கியமான அம்சம் நிகழ்வு அல்ல. அதை எடுத்துரைப்பதற்கான படைப்பின் உத்வேகமும், பரிச்சயமும், தன் சமகால ஏனைய படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் அனுபவமும் என்ற அம்சங்களை அது படைப்பாளியிடமிருந்து யாசித்துக்கொண்டிருக்கிறது. அந்த மகா முனியின் யாசிப்புக்களை எத்தனை படைப்பாளிகளால் நிவேதித்துவிட முடிந்துவிடப் போகிறது? நாம் இழக்கத் தயாரில்லாததால் வெறும் எழுத்தர்களாகவே ஆளுமை இழந்து நின்றுநிலைக்க நேர்ந்திருக்கிறது என்பது வெறுமனே மேம்போக்கான அபவாதம் அல்ல, ஆழச் சிந்தித்து அடைந்த நிஜக் கூறு.

பிரான்சிலிருந்து ‘இருள்வெளி’, ‘இனியும் சூல்கொள்’, ‘தோற்றுத்தான் போவோமா’, ‘சமதர்மபோதினி’, ‘கறுப்பு’, மற்றும் இங்கிலாந்திலிருந்து ‘ இன்னொரு காலடி’, ‘கண்ணில் தெரியுது வானம்’ போன்ற தொகுப்புக்கள் வெளிவந்தபோது அவை ஆர்வமான வாசகர்களை அடைந்து அது குறித்தான விமர்சனங்களைக் கிளர்த்திய வகையால், ஈழ இலக்கியம்பற்றி தமிழிலக்கிய உலகில் உயர்வான கருத்துக்களை அவற்றால் உருவாக்க முடிந்திருந்தது. ஒட்டுமொத்தமான புலம்பெயர் தமிழ்ப் பரப்பில் சுமார் முப்பது வரையான இதுபோன்ற மலர்கள் வெளிவந்திருக்கக் கூடுமென்பது எம் கணிப்பீடு. இவற்றில் சிலவே தம் அடையாளம் நிறுத்தி தம் வெளிவரவின் அர்த்தத்தைப் பூரணமாக்கியிருக்க முடியும். அவற்றின் முயற்சிகளுக்கான எம் வணக்கத்தை இச் சந்தர்ப்பத்தில் செலுத்திக்கொள்ளும் அதே வேளை, சீனம், இலத்தீன், இஸ்பானிய மொழிகளில் இவற்றைவிடக் காத்திரமான முயற்சிகளும் பெறுபேறுகளும் காணப்பட்டுள்ளன என்ற உண்மையையும் நாம் இங்கே ஒருமுறை நினைவுகூர்வது நல்லது.

Francesco Loriggio போன்ற பல்கலைக்கழகப் பின்னணியுள்ள சிலரால் மிக அற்புதமான இத்தாலிய கனடாக் குடியேறிகள் சார்ந்த இலக்கிய, சமூகக் கட்டுரைகள் பல தொகுப்புக்களாக வந்துள்ளன. ‘Social Pluralism and Literary History ‘ என்ற ஒரு தொகுப்பை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. ‘The Literature of the Italian Emigration’ என்று அதற்கு உப தலைப்புக் கொடுத்திருந்தார்கள். இதுபோன்ற இன்னுமொன்று Fulvo Daccia வின் ‘Interviews with the Phoenix’ என்ற தலைப்பிலான பதினைந்து இத்தாலிய-கியூபெக் கலைஞர்களது நேர்காணல்களின் தொகுப்பு. இவை போன்று ஈழத் தமிழ்ப் புலம்பெயர்ந்தோர் சார்ந்து, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சார்பில ‘Tropes Territories Competing Realities’, 'Being Human - Being Tamils' என்ற தலைப்புக்களில் மகாநாடுகளாக நடத்தப்பட்டுமோ, தமிழியல் மாநாட்டுக் குழுவினரால் நூல்களாக வெளியிடப்பட்டுமோ உள்ளன. எனினும் இவை கல்விப்புலம் சார்ந்தவை. ஆய்வுரீதியில் வெளிவந்திருப்பவை. இவைபோல் தகவல்ரீதியாக ‘தமிழர் தகவல்’ மலர்களும், அளவெட்டி அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சி மரம்’ போன்ற ஊர்ச் சங்கங்களின் இலக்கிய மலர்களும் தம்தம் அளவில் சில முன்னெடுப்புக்களைச் செய்துள்ளன. இவை நிச்சயமாக எமது முன்னோடிகள் என்பதை நாம் மறந்துபோகவில்லை. ஆனாலும் இவை போதுமானவையல்ல என்பதை மிகவும் தாழ்மையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். இவை இலையை விரித்து தண்ணீர் தெளிப்பதுவரையான விருந்துக் காரியங்களே. பரிமாறல் இனிமேல்தான் நடைபெற வேண்டியிருந்தது. அதை படைப்புச் சார்ந்த ஆளுமைகளால் மட்டுமே செய்யமுடியுமென நாம் மனதார நம்புகிறோம். அதனால் எம் முயற்சியை, இந்த எமது நம்பிக்கையின் மேலாக வலிதாகக் கட்டிக்கொண்டு முன்னெடுக்கத் தயாராகியுள்ளோம்.

இந்த ஒரு தொகுப்பிலேயே கனடாத் தமிழ்ப் புலத்தின் இலக்கிய வீற்றினை முற்றுமுழுதுமாய் வெளிப்படுத்திவிட இயலாதென நாமறிவோம். அதனால் இதுபோல் இன்னும் சில தொகுப்புக்களையேனும் ஆண்டுதோறும் வெளியிடும் தீர்க்கமான எண்ணம் எம்மிடமுண்டு.

3.

Northrope Frye போன்ற ஒரு சிலரே மொழி மற்றும் நவீன இலக்கியச் சிந்தாந்தத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கனடா மண்ணில் விளங்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியகரமானதில்லை. வாழ்முறை ஒரு அடங்கிய சீரில் நடந்துகொண்டிருக்கும்போது அதை மீறுவதற்கான எழுச்சி மனநிலைகள் பெரும்பாலும் கருத்தியல் ஆதிக்கத்துக்காக முயற்சிப்பதில்லை. ஒரு சமூக மாற்றத்துக்கான அவசியம் பொருளாதாரக் காரணமேயெனினும், அது மனநிலைக் கிளர்ச்சியின் விளைவானதும்தான். அந்த சமூகக் கிளர்ச்சிக்கான மனநிலை பூர்வ குடிகள் மத்தியில் இருக்குமளவுகூட வந்தேறு குடிகள்வசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளின் தோற்றம் ஆங்கில, பிரான்ஸ் மொழிப்புலங்களில்கூட இங்கு அரிதாகவே இருந்திருக்கிறது.

பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ர~;யா போன்ற நாடுகளுடனான ஒப்பீட்டளவில் இதுவே நிலைமையானாலும், வீச்சுள்ள சில சிற்றிதழ்களின் வருகை இங்கு தவிர்க்கவியலாதவாறு நிகழ்ந்தேயுள்ளது. Brick, Exile, The Nashwaak Review, The New Quarterly, The Fiddlehead, Canadian Literature, The Prairie Journal, Grain மற்றும் தீவிர பெண்ணிலைவாத சமூக ஒருபாலினக் கொள்கைகள் கொண்ட Room, Cahoots, Fence, Writing in the Margin, Descant ஆகிய ஏடுகளின் இலக்கிய சமூகப் பங்களிப்புகள் வலிதானவையே.

இவற்றைவிட பூர்வ குடிகளின் போராட்டம், அவற்றின் வெளிப்பாட்டுக் களமான அரசியல் இலக்கிய வகைமைகளை மேலெடுக்கும் பல்வேறு இணைய தளங்களும் இங்கே உள. இவையெல்லாம் ஒட்டுமொத்தமான கனடா இலக்கியத்துக்கு குறைத்து மதிப்பிட முடியாத பங்களிப்பை ஆற்றியுள்ளன, ஆற்றிக்கொண்டிருக்கின்றன.

தமிழை எடுத்துக்கொண்டு அலசினாலும், இந்த உண்மை தெளிவாகும். மொழிப் பரப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிற சிற்றிதழ்கள் அந்த மொழிக்குமே பெருந்தொண்டாற்றுகின்றன. தமிழில் நவீன கவிதையின் வருகையை முன்னறிவித்தது அச்சு யந்திரமேயெனினும், அதை முன்மொழிந்து வாசல் திறந்தது ‘எழுத்து’ போன்ற சிற்றிதழ்களே.

கனடாத் தமிழ்ப் பரப்பிலும் பெருவிசையை முன்னறிவித்துக்கொண்டு பல்வேறு தமிழ்ச் சிற்றிதழ்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து உருவாகவே செய்தன. மற்றது, தேடல், ழகரம், பறை, அறிதுயில், மறுமொழி, நான்காவது பரிமாணம், அற்றம், உரைமொழிவு, திண்ணையென்பன அவற்றுள் சில. ‘பார்வை’ என்ற சிற்றிதழில் தொடங்கிய செல்வம் அருளானந்தத்தின் இலக்கியப் பயணம் இன்று ‘காலம்’ என்ற சஞ்சிகையாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நிலைத்திருக்கிற இதழ் முயற்சி இதுவொன்றே.

இதுபற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கான மூலதாரமான வி~யங்கள் இங்கு அரும்பாடுபட்டே தேடப்படவேண்டியுள்ளதான நிலை. இவைபற்றிய தகவல் கொடுக்கின்ற எமது முயற்சியில் சில தவறியிருப்பின் அதற்கான காரணமாகவே இதை இங்கே இப்போது சொல்லிவைக்கிறேன். இவை குறித்த தகவல்களைச் சேகரிக்க ஒரு பரவலான முயற்சி செய்யப்பட்டது. ஆனாலும், இதுவே சாதனை என்னுமளவுக்கு இதில் எமக்குத் திருப்தி இருக்கிறது.



4

நடனம், இசை, நாடகங்களில் நமது அக்கறை குறைவானதில்லை. இருந்தும் அவற்றை அடையாளப்படுத்தும் அளவுக்குத்தான் சில அம்சங்களை இம் மலரிலே சேர்ப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதை ஓர் ஆரம்பமாகக் கொண்டால் இனி வரும் காலங்களில் அவற்றுக்கான முக்கியத்துவத்துடன் வி~யங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிவிப்பது நமது கடமை.

கனடாப் புலத்தில் விரிந்துவரும் குறும்பட, மாற்றுச் சினிமாவுக்கான முயற்சிகள் ஒரு தனிப் பகுதியாகக் கவனிக்கப்பட வேண்டியவை. இருந்தும் அவற்றை அடையாளப்படுத்தும் வகையில் சென்ற ஆண்டு ‘தமிழர் தகவல்’ ஆண்டு மலரில் வெளிவந்த எனது கட்டுரையொன்றை மட்டுமே இதில் மீள்பிரசுரமாக்கியிருக்கிறோம். இன்னும் சிலரது படைப்புக்கள் இதில் வெளிவந்திருக்கவேண்டும். ஆனால் தொடர்பாடல் பிரச்சினையும், காலதாமதமும் அதை இயலாததாக்கிவிட்டிருக்கிறது. இது குறித்து நமக்குப் பெரிதான வருத்தமுமில்லை. குதர்க்கமும், வாயாடித்தனமும், அகம்பாவமும் அறிவுஜீவித்தனத்தின் அடையாளமென மிகத் தவறாகவே இவர்களுக்குப் புரிதலாகியிருக்கிற வகையில், இதற்காக நாம் இவர்களோடு யுத்தம் செய்யவா முடியும்? மேலும் எந்த யுத்தத்தைத்தான் புரிவது?

ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்ப் பிள்ளைகளின் வளர்ச்சிபற்றிய அவதானிப்பு நமக்கு முக்கியமானது. நாளைய இலக்கியத்தின் செல்நெறிபற்றிய எம் பார்வை சரியானது என எமக்கு நம்பிக்கை இருக்கிறவகையில் இந்த அக்கறையை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. ஆயினும் தமிழில் தம் சிந்தனையை வெளிப்படுத்தும் தமிழ்க் குழந்தைகளையே நாம் ஆராதிக்கிறோம் என்பது சத்தியம். இவர்களுக்காக நாம் என்ன செய்யமுடியும்? சிந்திப்போம்.

இப்போதைக்கு ஓர் அறிகுறியாக, ஸ்கார்பரோவில் ஆண்டுதோறும் வெளியிடப்பெறும் ஆங்கிலமொழியிலான படைப்பிலக்கியத் தொகுப்பில் தம் ஆற்றல் காட்டிவரும் தமிழ்க் குழந்தைகளில் ஒருவரான தமயந்தி கிரிதரனின் ‘நன்றி’ (Thanks) ஆங்கிலச் சிறுகதையை மொழியாக்கம்செய்து வெளியிட்டிருக்கிறோம்.

இச் செயலாக்கத்தில் ஆர்வம்கொண்டு விளம்பர உதவிசெய்தவர்களின் பட்டியல் தனியாக உண்டு. அவர்களுக்கு எம் நன்றிகள். மற்றும் தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் டி.திலீப்குமாருக்கும், விளம்பரங்களை வெளியிட்டு உதவிய பத்திரிகை நிறுவனர்களுக்கும், கணினித் துறையில் ஆலோசனை தந்த வரனுக்கும் எம் நன்றி.

தொகுப்பாசிரியன்,
தேவகாந்தன்

Sunday, February 14, 2010

தான்யா கவிதைகள்

தான்யா கவிதைகள்

1.
துருப்பிடித்துக் கறுத்த
கடிகாரத்தின் செயற்பாட்டை விழுங்கி
எழுகிறது ஓர் பருவப் பெண்ணின் கிளர்ச்சிகள்
உயிர்ப்பை குரலிலும்
காதலை மார்பிலும்
பதுக்கிய
அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்
எந்த மனதையும் சென்றடையாது
மூடிக் கொள்கிறது

நெருடல்களில் தனிமை புரியாது
விறைத்துக் கொள்கிறது குறி
என்னை என் உடலை
நூறாயிரம் மலர்கள் கொண்டு மூட
எத்தனிக்கிறது எனதிந்த ஆன்மா

எதிரில் மண்டியிட்டு அணைத்து
கசப்புக்களை உள்வாங்கி
பாதங்களை வருடி
பெருவிரலின் வெடிப்புக்களையெல்லாம்
தன் வாய் கொண்டு மூடி
என்னை என் இளமையை
இன்பத்தை வேண்டி நிற்கும் உதடுகளை
களீபரம் செய்கிறது உனது உடல்

வழி அநுப்பி வைக்கும் தைரியமின்றி
காதலின் பெயரால் ஓர் ருத்ர தாண்டவம்
நடந்து முடிகிறது.

03-10-2004

2.

மழைபெய்து கொண்டிருக்கிறது
மழை மகிழ்சியின் குறியீடு என்கிறாய்
எனக்கு மழை தனிமையின் குறியீடாய்.
ஒரே நாளில் பெரியவர்களின் உலகில்
அடித்து தள்ளிய அன்றைப் போல
அத்துமீறலின் குறியீடாய் குழந்தைதனங்களின்
வீழ்ச்சியாய் மழை துயரத்தை பேசுகிறது
பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுட் தனிக்கிறேன்.
மழை பெய்து கொண்டேயிருக்கிறது
நிற்பதற்கான அறிகுறிகளற்று..
அன்றைப் போலவே இரைச்சலுள் காணமல்போன
உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எல்லோரும் சொல்கிற அழகியை நீயே கண்டு பிடித்தது போல
அழகி என்கிறாய். யார் தான் அழகில்லை என்கிறேன்
எல்லோரும் பேசுகிற அரசியலை பேசுகிறாய்
எல்லோருடைய எல்லாவற்றையும் புறக்கணிக்காத நீ
தனித்துவமாய்
பெண்ணியம், சமத்துவம், பின்னவீனத்துவம்
என எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்
நீ மழையை மழைக்காய் இரசிக்கிறாயா? அல்லது
எல்லாரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக இரசிக்கிறாயா
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய் இருக்கிறாய்.

9ஃ2ஃ07

3.
நீண்டு கொண்டிருக்கின்ற வெளிகளிலெல்லாம்
தன் இருப்பின் சுருக்குகளை கொடுக்குக்களாக்கும்
தேளைப் பொலாயிற்று இன்றைய நாட்கள்.
யாரைப்பார்த்தாலும் வெறுப்பு நீள்கிறது..
அன்பையும் நேசிப்பையும் கற்றுத்தந்தவர்கள்
எல்லோரும் தொலைவில் இருக்க
தனிமையின் கதறல்களை கேட்க முடியாத கதவிடையிருந்து
பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.
சூனியத்தின் வாசல்களையெல்லாம் திறந்துபடி
நுளைகிறார்கள் நண்பர்கள்.
வகுப்பறை நாற்காலிகள் இழுத்து வைத்திருக்கிறது
எழுந்து போக முடியாதபடி
தொடங்குகிற புள்ளியிலே மீண்டும் வந்து நிர்க்கிறேன்.
பழகிய இடங்களில் மட்டுமே வாழத் தெரிந்த விலங்குகளைப்போல
தெரியாத வெளிகள் அச்சுறுத்துகிறது.

9ஃ5ஃ07


செழியன் கவிதைகள்

செழியன் கவிதைகள்

1.

சோகமும் துயரமும் நிறைந்த ஒரு நிழல்
எங்கள் நிலங்களில் எழுதப்பட்டுக் கிடக்கின்றது
மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல்
பதினாறு திசைகளிலும் பரவுகின்றது

சோற்றுப் பானைக்குள் இருக்கும்
பருக்கைகளை எண்ணுவதற்குள்
குழந்தை செத்துக் கிடக்கின்றது

இரவையும் பகலையும்
திருடிக் கொண்டு போய்விட்டார்கள்
இப்போது துவக்கின் நுனியில் இருக்கின்றது மனச்சாட்சி
காற்று மெல்ல இடம் பெயர்கின்றது
பிணவாசனையைச் சுமந்து கொண்டு
சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு


வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும்
வயல் வரப்புகளுக்குள்ளும்
வாவிக் கரைகளிலும் தொலைத்துவிட்டு
பனிப்புலங்களுக்கிடையிலும்
இயந்திரங்களுக்கிடையிலும்
தேடியவர்கள் களைத்துப் போனார்கள்

ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும்
கணுவர் இலைகளின் நுனிகளில் நின்று
துடித்துக்கொண்டிருக்கின்றது நம்பிக்கை
கண்ணீரிலும், மூச்சிலும், கரைந்து
அது முடிவிலி வரை எதிரொலிக்கின்றது

----
2.

வானத்தில் இருந்து பனி புலத்தில் இறங்கும் போது
ப+த்துப் போன மலர்களின் வாசைன
எல்லார் முகங்களிலும் இருந்தது
தெருக்களில் பாடல்களின் ஒலிகள் எழுந்தன
பறவைகள் எல்லாம் கதகதப்பாக சிறகசைத்து அழைத்தன
மனது கரைந்து போக மகிழ்ச்சி மழைக்காடாய் கொட்டியது

குளிர்ந்த இருட்டில், திருப்பத்தில்;
தனியாய் நின்ற என்னை ஒருநாள்
தூக்கிக் கொண்டு போனது ஒரு பறவை
உயரமான சி என் கோபுரத்தில் பத்திரமாகச் சேர்த்தது
நின்று பார்த்த போது
வெட்டாந்தரை மட்டுமே தெரிந்தது
சூரியன் முகத்தை மறைத்துக் கொண்டு
திருடனைப் போல பதுங்கியிருந்தான்
மனிதர்கள் புழுக்களைப் போல நெளிந்து கொண்டிருந்தார்கள்
மழையில் நனைந்து கொண்டிருந்தன வண்ணத்துப்ப+ச்சிகள்
இறக்கைகளை இழந்துவிட்டு

என்னுடைய உலகம் அழகானது என்று நம்பி இருந்தேன்
இப்போ ஆழ்ந்த தவிப்பில் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்
என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்
குதிரையைப் போல நாட்கள் மட்டும் கனைக்கின்றது!
---------

3.
கார்த்திகை மாதத்தில் உதிக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியில்
ஒரு கார்த்திகைப்ப+வின் புன்சிரிப்போடுதான் அவள் இருந்தாள்

மேகமும், மழையும், பனியும் கலந்து மண்ணில் எழுதுகின்ற
கவிதைகளுக்குள் அவள் ஒரு இராஐகுமாரி

காலையில் மலரும் மல்லிகையைப்போல
மணம் பரப்பி எனக்காக காத்திருப்பதாக அவள் கூறியதேயில்லை
என்னைப் பார்த்ததிற்கான அடையாளம் அவள் முகத்தில்
என்றுமே இருந்ததேயில்லை

அவளுடைய பெயரை உச்சரிக்கின்ற போதெல்லாம்
ப+க்களின் இதழ்கள் எல்லாம்
செவ்வரத்தம் ப+க்களைப் போல முகம் சிவந்து
வெட்கித்து தலை குனியும்

இரவுகள் கூட அவளை பார்ப்பதற்கு
தனியாக மறைந்து வரும்

அற்புதமான ஒரு சங்கீதத்தின் இடையில் விழுந்த
ஒரு கீறலைப்போலத்
தொலைந்து போனாள் அவள். மனதை விட்டு அல்ல

எங்கள் தேசத்து ப+வரசம் ப+க்களின் மகரந்த மணிகளில்
இந்த சோகங்களை எழுதிவைத்தது யார் என்று
அப்போது அவளோ நானோ தெரிந்திருக்கவில்லை

முகில்களின் மறைவில் பனித்துளிகள் துளிர்க்கையில்
எங்கள் காதலை மட்டுமா நாம் இழந்தோம்

அவளோடு சேர்த்து வயல்களும், காடுகளும், வாவிக்கரைகளுமாய் இருந்த
என் தேசத்தையும் அல்லவா அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்


அவர்கள் ஒருவருடன் ஒருவர் முத்தமிடுவதில்லை
ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்சிரிப்பதில்லை
அவர்களது துப்பாக்கிகளின் உதடுகள் மட்டும்
அவ்வப்போது திறந்து மூடுகின்றன




திருமாவளவன் கவிதைகள்

1.
வெட்டுப் பலி
மந்திரங்கள்
கட்டுதற்கு தொன்நூற்றொன்பது
வெட்டுதற்கு நூறாம்

காடேறி
சுடலை மாடன்
கரையாக்கன்
கல்யாண வைரவன்
மோகினி,
பிடாரி
பேச்சி
குறளி முதலாய தேவதைகள்
சன்னதங்கொண்டு ஆட தொடங்கிற்று
சடங்கு

தேவாங்கு மூத்திரத்தில் மந்திரித்தெடுத்த
கோலோகொண்டு
ஆடும் துர்தேவதைகளை வசியம் பண்ணி
வழி நடத்துகிறான்
ப+சாரி
செம்பட்டு உத்தரியம் மாரில் தொங்க

விரித்த மடி கத்தியை
மணிக்கட்டில் அழுத்தி
கட்டும் மந்ரங்களை உட்சாடனம் செய்து
இரத்தப்பலி தருகிறேன் வா
என ஏய்த்து
ஆவேசங் கொண்டு ஆடும் தெய்வங்களை
மந்தித்தால் கட்டி
வீழ்த்தி
ஆசானுக்கு சவால் விடுகிறான்
மந்திரவாதி

இவன் வெட்ட
அவன் கட்ட
கட்டுதலும் வெட்டுதலும் தொடர
ஏராளம் தேசிப்பிஞ்சுகளும்
குரும்பை இளநீரும் வெட்டு; பலியாச்சு

சோலை தோப்புகள்
ஊர் ஒழுங்கையெல்வாம் வெறுமை படர்கிறது
தூக்கிய காவடியை இறக்கமுடியாத் தவிப்பில்
தொடர்கிறது வீரவிளையாட்டு

கழிகிறது காலம்

பக்த கோடிகளின் அரோஹர கோசங்களுக்கிடையே
உருக்கொண்டாள்
புதிய தேவதை
நெடுநிலம் ஐந்தும் பெருங்கடல் ஏழும்
தாண்டி
தொலைதூர மேற்கிருந்து வந்தவள்

நீ கட்டு - நீ வெட்டு
எதற்கும் பணியேன்
ஆவேசம் கொள்கிறாள் தேவதை

மனஞ்சோராப் பெருமுயற்சி பலனற்று
போயிற்று
எஞ்சிற்று சலிப்பு
இனி ஆபத்துக்கு பாவமில்லை
என்றுணர்தாயிற்று

இப்போ
இருவர் முயற்சியும் ஒன்று:
புதியவளுக்கு
போக்குக் காட்டி துரத்துதியாயிற்று
மீளத்தொடர்கிறது

மந்ர தந்திரமும்
மாய விளையாட்டும்

நேற்றுப் பெய்த சிறுமழையில்
சோலை வளவெல்லாம்
காய் கண்ணி கட்டிற்று
அடித்து பறிகிறார்கள்
தேசிப் பிஞ்சுகளும்
இளநீரும்
வெற்றிலைக் கொழுந்தும்

குவிகிறது வெட்டுப்பலி





2.
அதிகாலையில் மரணச் செய்தி

காலைக் கருக்கலில்
முடிந்தது
கடுழியம்

வீடு மீள்கிறேன்

இரவெல்லாம் பனியோடு சுழித்த காற்றில்
எழுகிறது
பனி முகடு

ஆலைச் சுவரோரம்
விறைத்து உயிர் விட்ட
புறாவொன்றின் உடலம்
வெள்ளைப் பணி எடுத்து
மெல்ல மூடி விடுகிறது கற்று


தெருமுனையில் நிமிர
உயிர்விடு;கணத்தில் நஸ்கங் க விலங்கு
துப்பிய நாற்றம்
வயிற்றை குமட்ட
வெளியே கொணர முனைகிறது
குடல்


சீ.என். கோபுர ஊசியில் நுனியில்
நிலவு
ஒளி இல்லை
மஞ்சல் குங்கும் சாத்தி
தலையில் தேசிக்காய் குத்திய வைரவர் சூலம்
நினைவில்


401 நெடுஞ்சாலையில் நெரிசல்
கடக்க
சிவப்பு நீல
மின்மினி விளக்குகள் மின்ன
காவலர் கடாக்கள்
நடுவே
சிதறி; கிடக்கிறது இரண்டு வாகனம்
எவனோ ஒரு குடியேறி
தூக்கக் கலக்கத்தில் ஓட்டியிருப்பான் காரை
என்னைப் போல்

தூரக் காற்றில் கரைந்தழிகிறது
அவசர மருத்துவ வண்டியின் சங்கொலி

பனியில் மிதந்து நீந்தி வீடு சேர்ந்து
குளிருடைச் சுமை நெகிழ்த்தி
கடாசிவிட்டு
காலோய
கண்முன்னே சிந்திக்கிடக்கிறது
கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள்

எல்லாவற்றிலிருந்தும் எழுகிறது
பிண நாற்றம்

மூக்கை இறுகப் பொத்தியபடி இயந்திரமாய்
படுக்கையில் வீழ்கிறேன்

நெடு நேரம் விழிப்பு
எப்போதென தெரியாது
தூக்கம் கலைக்க
அகாலமாய் அலறுகிறது
தொலைபேசி
œ


கூர் 2008 ஆம் ஆண்டு மலரில் வெளியான முழுப் படைப்புக்களையும் வெளியிட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளில் மீளப்பெற முடிந்தவைமட்டும் இங்கு பிரசுரமாகின்றன.

Sunday, January 3, 2010


கனடியத் தமிழ்ப் புலத்தின் வீறார்ந்த படைப்புகளைத் தாங்கி 2008இல் கூர் வாசகர் வட்டம் சார்பில் வெளிவந்த ‘நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்’ என்ற தலைப்பிலான முதலாவது தொகுப்பு.