Sunday, February 14, 2010

தான்யா கவிதைகள்

தான்யா கவிதைகள்

1.
துருப்பிடித்துக் கறுத்த
கடிகாரத்தின் செயற்பாட்டை விழுங்கி
எழுகிறது ஓர் பருவப் பெண்ணின் கிளர்ச்சிகள்
உயிர்ப்பை குரலிலும்
காதலை மார்பிலும்
பதுக்கிய
அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்
எந்த மனதையும் சென்றடையாது
மூடிக் கொள்கிறது

நெருடல்களில் தனிமை புரியாது
விறைத்துக் கொள்கிறது குறி
என்னை என் உடலை
நூறாயிரம் மலர்கள் கொண்டு மூட
எத்தனிக்கிறது எனதிந்த ஆன்மா

எதிரில் மண்டியிட்டு அணைத்து
கசப்புக்களை உள்வாங்கி
பாதங்களை வருடி
பெருவிரலின் வெடிப்புக்களையெல்லாம்
தன் வாய் கொண்டு மூடி
என்னை என் இளமையை
இன்பத்தை வேண்டி நிற்கும் உதடுகளை
களீபரம் செய்கிறது உனது உடல்

வழி அநுப்பி வைக்கும் தைரியமின்றி
காதலின் பெயரால் ஓர் ருத்ர தாண்டவம்
நடந்து முடிகிறது.

03-10-2004

2.

மழைபெய்து கொண்டிருக்கிறது
மழை மகிழ்சியின் குறியீடு என்கிறாய்
எனக்கு மழை தனிமையின் குறியீடாய்.
ஒரே நாளில் பெரியவர்களின் உலகில்
அடித்து தள்ளிய அன்றைப் போல
அத்துமீறலின் குறியீடாய் குழந்தைதனங்களின்
வீழ்ச்சியாய் மழை துயரத்தை பேசுகிறது
பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுட் தனிக்கிறேன்.
மழை பெய்து கொண்டேயிருக்கிறது
நிற்பதற்கான அறிகுறிகளற்று..
அன்றைப் போலவே இரைச்சலுள் காணமல்போன
உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எல்லோரும் சொல்கிற அழகியை நீயே கண்டு பிடித்தது போல
அழகி என்கிறாய். யார் தான் அழகில்லை என்கிறேன்
எல்லோரும் பேசுகிற அரசியலை பேசுகிறாய்
எல்லோருடைய எல்லாவற்றையும் புறக்கணிக்காத நீ
தனித்துவமாய்
பெண்ணியம், சமத்துவம், பின்னவீனத்துவம்
என எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்
நீ மழையை மழைக்காய் இரசிக்கிறாயா? அல்லது
எல்லாரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக இரசிக்கிறாயா
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய் இருக்கிறாய்.

9ஃ2ஃ07

3.
நீண்டு கொண்டிருக்கின்ற வெளிகளிலெல்லாம்
தன் இருப்பின் சுருக்குகளை கொடுக்குக்களாக்கும்
தேளைப் பொலாயிற்று இன்றைய நாட்கள்.
யாரைப்பார்த்தாலும் வெறுப்பு நீள்கிறது..
அன்பையும் நேசிப்பையும் கற்றுத்தந்தவர்கள்
எல்லோரும் தொலைவில் இருக்க
தனிமையின் கதறல்களை கேட்க முடியாத கதவிடையிருந்து
பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.
சூனியத்தின் வாசல்களையெல்லாம் திறந்துபடி
நுளைகிறார்கள் நண்பர்கள்.
வகுப்பறை நாற்காலிகள் இழுத்து வைத்திருக்கிறது
எழுந்து போக முடியாதபடி
தொடங்குகிற புள்ளியிலே மீண்டும் வந்து நிர்க்கிறேன்.
பழகிய இடங்களில் மட்டுமே வாழத் தெரிந்த விலங்குகளைப்போல
தெரியாத வெளிகள் அச்சுறுத்துகிறது.

9ஃ5ஃ07


No comments:

Post a Comment