Sunday, February 14, 2010

செழியன் கவிதைகள்

செழியன் கவிதைகள்

1.

சோகமும் துயரமும் நிறைந்த ஒரு நிழல்
எங்கள் நிலங்களில் எழுதப்பட்டுக் கிடக்கின்றது
மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல்
பதினாறு திசைகளிலும் பரவுகின்றது

சோற்றுப் பானைக்குள் இருக்கும்
பருக்கைகளை எண்ணுவதற்குள்
குழந்தை செத்துக் கிடக்கின்றது

இரவையும் பகலையும்
திருடிக் கொண்டு போய்விட்டார்கள்
இப்போது துவக்கின் நுனியில் இருக்கின்றது மனச்சாட்சி
காற்று மெல்ல இடம் பெயர்கின்றது
பிணவாசனையைச் சுமந்து கொண்டு
சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு


வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும்
வயல் வரப்புகளுக்குள்ளும்
வாவிக் கரைகளிலும் தொலைத்துவிட்டு
பனிப்புலங்களுக்கிடையிலும்
இயந்திரங்களுக்கிடையிலும்
தேடியவர்கள் களைத்துப் போனார்கள்

ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும்
கணுவர் இலைகளின் நுனிகளில் நின்று
துடித்துக்கொண்டிருக்கின்றது நம்பிக்கை
கண்ணீரிலும், மூச்சிலும், கரைந்து
அது முடிவிலி வரை எதிரொலிக்கின்றது

----
2.

வானத்தில் இருந்து பனி புலத்தில் இறங்கும் போது
ப+த்துப் போன மலர்களின் வாசைன
எல்லார் முகங்களிலும் இருந்தது
தெருக்களில் பாடல்களின் ஒலிகள் எழுந்தன
பறவைகள் எல்லாம் கதகதப்பாக சிறகசைத்து அழைத்தன
மனது கரைந்து போக மகிழ்ச்சி மழைக்காடாய் கொட்டியது

குளிர்ந்த இருட்டில், திருப்பத்தில்;
தனியாய் நின்ற என்னை ஒருநாள்
தூக்கிக் கொண்டு போனது ஒரு பறவை
உயரமான சி என் கோபுரத்தில் பத்திரமாகச் சேர்த்தது
நின்று பார்த்த போது
வெட்டாந்தரை மட்டுமே தெரிந்தது
சூரியன் முகத்தை மறைத்துக் கொண்டு
திருடனைப் போல பதுங்கியிருந்தான்
மனிதர்கள் புழுக்களைப் போல நெளிந்து கொண்டிருந்தார்கள்
மழையில் நனைந்து கொண்டிருந்தன வண்ணத்துப்ப+ச்சிகள்
இறக்கைகளை இழந்துவிட்டு

என்னுடைய உலகம் அழகானது என்று நம்பி இருந்தேன்
இப்போ ஆழ்ந்த தவிப்பில் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்
என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்
குதிரையைப் போல நாட்கள் மட்டும் கனைக்கின்றது!
---------

3.
கார்த்திகை மாதத்தில் உதிக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியில்
ஒரு கார்த்திகைப்ப+வின் புன்சிரிப்போடுதான் அவள் இருந்தாள்

மேகமும், மழையும், பனியும் கலந்து மண்ணில் எழுதுகின்ற
கவிதைகளுக்குள் அவள் ஒரு இராஐகுமாரி

காலையில் மலரும் மல்லிகையைப்போல
மணம் பரப்பி எனக்காக காத்திருப்பதாக அவள் கூறியதேயில்லை
என்னைப் பார்த்ததிற்கான அடையாளம் அவள் முகத்தில்
என்றுமே இருந்ததேயில்லை

அவளுடைய பெயரை உச்சரிக்கின்ற போதெல்லாம்
ப+க்களின் இதழ்கள் எல்லாம்
செவ்வரத்தம் ப+க்களைப் போல முகம் சிவந்து
வெட்கித்து தலை குனியும்

இரவுகள் கூட அவளை பார்ப்பதற்கு
தனியாக மறைந்து வரும்

அற்புதமான ஒரு சங்கீதத்தின் இடையில் விழுந்த
ஒரு கீறலைப்போலத்
தொலைந்து போனாள் அவள். மனதை விட்டு அல்ல

எங்கள் தேசத்து ப+வரசம் ப+க்களின் மகரந்த மணிகளில்
இந்த சோகங்களை எழுதிவைத்தது யார் என்று
அப்போது அவளோ நானோ தெரிந்திருக்கவில்லை

முகில்களின் மறைவில் பனித்துளிகள் துளிர்க்கையில்
எங்கள் காதலை மட்டுமா நாம் இழந்தோம்

அவளோடு சேர்த்து வயல்களும், காடுகளும், வாவிக்கரைகளுமாய் இருந்த
என் தேசத்தையும் அல்லவா அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்


அவர்கள் ஒருவருடன் ஒருவர் முத்தமிடுவதில்லை
ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்சிரிப்பதில்லை
அவர்களது துப்பாக்கிகளின் உதடுகள் மட்டும்
அவ்வப்போது திறந்து மூடுகின்றன




No comments:

Post a Comment